Trending

குறுந்தொகை 13 குவளையின் பசலை - பாடல் மற்றும் விளக்கக் கதை

 குறுந்தொகை 13

குவளையின் பசலை

kurunthogai-13



'வாருங்கள்…! மலையில் இருந்து இப்போது தான் வர நேரம் கிடைத்ததோ? மலை மீது செல்லக்கூடாது என்று எத்தனை முறை கூறி இருக்கிறேன்!'


'இல்லையம்மா! நானும் அண்ணனும் மலையில் நிறைய குரங்குகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டே இருந்தோம். அதனால் தான் நேரம் ஆகிவிட்டது'  என்று மழலை மொழியில் இளையவன் முகிலன் கூறினான்.


'தங்கமே.. உன்னை காணாமல் வானதி சோர்ந்து அமர்ந்திருக்கிறாள். வா… செல்வோம் ' என்றபடியே இருவர் கைப்பிடித்து தன் தோழி வானதி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் செண்பகம்.


வீட்டின் உள்நுழைந்தவுடன், இளையவன் முகிலன் ஓடிச் சென்று வானதியை கட்டி அனைத்துக்கொண்டான். அவன் பிஞ்சு கண்ணத்தில் வானதி முத்த மழை பொழிந்தாள். பின் ' தங்கமே… இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்? ' என்று கேட்டாள்.


மழலை மொழியில் முகிலன் 'நானும் அண்ணனும்... மலையில் குரங்குகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தோம்!'


'ஓ அப்படியா!?.. இனி மலைக்கு தனியே செல்லக் கூடாது அதில் கொடுரமான விலங்குகளும் பெரும் பாறைகளும் இருக்கும்..! அது மேலே விழுந்தது விடும் சரியா? ' என்று முகிலனிடம் கூறிக்கொண்டே மூத்தவன் அமுதனை பார்த்தாள் வானதி.


அவனும் 'இனி செல்லமாட்டோம்' என்றான்.


இரவு நேரம். வானதி, தன் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த தன் தோழி செண்பகத்திற்க்கும் அவள் குழந்தைகளுக்கும் உணவு சமைத்து அதனை அவர்களுக்கு படைத்தாள்.


பிள்ளைகள் இருவரும் உணவருந்திவிட்டு பின் கண்ணயர்ந்தனர்.


தோழிகள் இருவரும் தங்கள் வாழ்க்கை நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாடினார்.


வெகு நாளாக வானதி உடல் தோற்றமும் அவள் முக அமைப்பும் எதையோ நினைத்து வருத்தம் கொண்டது போல் இருந்ததையும் அடிக்கடி அவள் மலைமீதிருக்கும் சேயோன் கோயிலுக்கு செல்வதையும் பற்றி செண்பகம். வானதியிடம் கேட்டாள்‌. 


அவளோ 'அதெல்லாம் ஒன்றுமில்லை' என்று சமாளித்துவிட்டாள். 


வானதியின் அம்மா,  தன் சொந்த ஊரில் உள்ள உறவினர்  வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் தங்கி வருவதாக கூறிச்சென்றுவிட்டார்.   அந்த ஊரிலேயே இருக்கும் தன் மகள் வானதியின் தோழி செண்பகத்தை‌, தன் வீட்டில் சென்று வானதிக்கு துணையாக இருக்கும் படி கூற. செண்பகமும் தன் கணவன் அனுமதி பெற்று வானதிக்கு துணையாக இருக்க குழந்தைகளுடன் வந்தாள்.


வானதி காலை முதல் மாலை வரை இளையவன் முகிலனுடன் கொஞ்சி விளையாடுவாள். பின் மாலை நேரம் மன அமைதிக்காக மலையில் உள்ள சேயோன் கோயிலுக்கு சென்று வருவதாக செண்பகத்திடம் கூறி மலைக்கு சென்று வருவாள்.


ஒர் நாள். மூத்தவன் முகிலன் எப்போதும் போல்  மலையை சுற்றி வளம் வந்து கொண்டிருந்தான். அவன் வாழ்ந்த நிலம் மருதநிலம். ஆதலால் மலை சூழ்ந்த குறிஞ்சிநிலத்தின் அழகு அவனை கவர்ந்தது. அவன் யார் கூறும் அறிவுரைகளையும் கேட்க மாட்டான். இதை செய்யாதே என்றால் அதையே செய்வான். அதனால் தான் அவன் அம்மா மற்றும் வானதி கூறிய பேச்சைக் கேட்காமல் மலையில் ஏறி சுற்றி வந்தான்.  வெகு நேரம் மலையில் அழைந்து கொண்டிருந்தவனின் கண்களில் யானை போன்று பெரியதொரு பாறை கண்ணில்பட்டது அதன் நிழலில் சற்று படுத்து களைப்பாறிவிட்டு எழுந்தான். அந்த பாறையில் ஓரிடத்தில் இரு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சென்று பார்த்தான் அதில் வானதி என்றும் அதன் அருகில் ருத்ரநாடன் என்ற பெயரும் இருந்தது. 


அந்நேரம் யாரோ வருவது போல் சத்தம் கேட்க அருகில் இருந்த மற்றொரு பாறையில் மறைந்து கொண்டான். 


அங்கு வந்தது வானதி. அவள் அந்த பாறையில் பெயர் பொறிக்கப்பட்ட இடத்தில் நின்று அழுது புலம்பியதை முகிலன் கண்டான்.


பின் வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் நடந்ததை கூறினான். செண்பகம் தன் மகன் கூறியதை வியப்புடன் கேட்டாள். பின் இனி மலை மீது ஏறக்கூடாது  என்று அமுதனை கண்டித்தாள்.


மறு நாள் மாலை வானதி கோயிலுக்கு சென்றுவருவதாக கூறி செல்ல முகிலனை அமுதனின் பொறுப்பில் விட்டுவிட்டு செண்பகம் வானதியை பின் தொடர்ந்து செல்ல... அங்கு அமுதன் கூறியது போலவே கோயிலுக்கு செல்லாமல் பாறையின் அருகில் அமர்ந்து வானதி புலம்புவதை கண்டாள். 


பின் அவள் முன் சென்று நடந்ததை கூறும்படிகேட்க. வானதி 'நான் ஒருவரை காதலித்தேன். அவரும் நானும் இந்த யானை போன்று அமைந்திருக்கும் இந்த பாறையின் நிழலில் கூடி மகிழ்ந்தோம். அவன் பொருள் ஈட்டுவதற்க்காக அசலூர் சென்றிருக்கிறான். அதன் காரணமாக வந்த பசலைநோய்(ஒருவரைக் காணத் துடிக்கும் உள்ள உணர்வு ) குவளை மலர் போன்ற என் கண்களை சிவந்து வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது' என்று செண்பகத்தின் தோளில் சாய்ந்து அழ தொடங்கினாள் வானதி.


செண்பகம் அவளுக்கு ஆறுதல் கூறி. அவளுக்கு நம்பிக்கை தந்தாள்.


-குகன்


குறுந்தொகை 13


மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்தநம் குவளைஅம் கண்ணே  - கபிலர்

1 Comments

  1. கபிலர் பாடல் தனிச்சுவை உடையது. அதை குகனார் தற்கால கதைகளோடு பொருந்த முனைவது ஈராயிரம் ஆண்டு அகவியல் தொடர்ச்சியை பறைசாற்றுகிறது.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு