Trending

தந்திர உலகம் - 4.ரசவாதிகள்

முதல்பாகம் - புகைக்கூண்டு
ரசவாதிகள்

mystery world tamil

Copyright Free Image From PIXABAY

மரங்கொத்தி பறவை ஒன்று நீண்ட நாட்களாக தேடி அலைந்து, பல மரங்களை பரிசோதித்துப்பார்த்து.. கடைசியாக அந்த மகோகனி மரத்தினை தான் குஞ்சுபொறிப்பதற்காகத் தெரிவுசெய்தது. ஏனெனில் அந்தமரத்தில் ஏற்கனவே ஒரு பொந்துபோன்ற சிறு பிளவு இருந்ததை அது கண்டுகொண்டது. தனது வலிய அலகு மூலம் சற்றே முயன்றால் நேர்த்தியானதொரு வாழிடமாக அதை வடிவமைக்க அதனால் முடியும். மரம்முழுவதும் கொடிகள் படர்ந்து கிடந்தன... மேலும்,

 கீழே காய்ந்த இலைசருகுகள் கோடிக்கணக்கில் கொட்டி கிடப்பதாலும்.. வளமான ஈரநிலம் இருப்பதாலும் இங்கு பிடித்து திண்ண புழு பூச்சிகளுக்கும் பஞ்சமிருக்காது என்றும் அது நினைத்தது.

 தன் உடல் நுழையுமளவுக்கு அந்த சிறுபிளவை பொந்தாக  செதுக்கியது.. ஒருமுறையல்ல இருமுறையல்ல நொடிக்கு நூறுமுறை முன்னும் பின்னுமாக தலையசைத்து கூரிய அலகால் அம்மரம் அதிர்வுற அதிர்வுற துளையிட்டது. 

ஓரளவு பொந்து உருவான பிறகு உள்ளே நுழைந்து வசதியை சரிபார்த்தது.. அப்படி என்ன குறைகண்டதோ..? மறுபடியும் அதன் எந்திரத்தலை இயங்கத்தொடங்கியது..! 'டொடக்..டொடக்..டொடக்...' என்று சத்தம் சுற்றுவட்டாரமெங்கும் ஒலித்தது.. மகோகனிமரம் மிக வலிமையான தேகம் கொண்டது என்றாலும் மரங்கொத்தி அதனைப்போல ஆயிரம் ஆயிரம் மரங்களை துளைத்த அநுபவம் கொண்டிருந்தது. 

வேறு ஜீவராசிகளின் கண்ணில்படுவதற்கு முன்  இப்படியொரு வசதியான பொந்து தனக்கு அகப்பட்டது என்றால் அதுதன்னுடைய நல்லநேரம் தான்.. என்றெண்ணி மகிழ்ந்தது.


ஒரு வழியாக பொந்தை உருவாக்கி முடித்து சிறிதுநாழி ஓய்வு கொண்டுவிட்டு.. பிறகு பறக்க எத்தனித்த போது தான்.. அதற்கு 'ராகு காலம்' ஆரம்பமாயிற்று...!


அதிகம் கிளைகளில்லாத அம்மரத்தில் அடர்பச்சைநிற கொடிகள் நீக்கமற எங்கும் நிறைந்து படர்ந்து.. விழுதென தொங்கிகிடந்தன. கொடிகளோடு கொடியாக மகோகனி மரக்கிளையில் ஊர்ந்து.. பின்னி.. முன்னேறி வந்துகொண்டிருந்தது கடும்விஷம் தோய்ந்த "கண்ணாடி விரியன்" வகை முதிர்ந்த நாகம் ஒன்று..!


கிளை தோன்றும் இடமும் மரப் பொந்தும் வெகு அருகில் இருந்ததால் கண்இமைக்கும் நேரத்தில் பொந்தின் வாயருகே பாம்பு வந்து நின்றது. ஆனால் தலையை உள்ளே விட வில்லை.


பொந்தினுள் மரங்கொத்தி சிறகிழந்த பறவையாய் தவித்தது! எப்படியும் வெளியேபோனால் சாவு நிச்சயம். அந்த பாம்பு உள்ளே தலையை நுழைத்தாலாவது இது தன் கூரிய அலகால் ஒரே போடாக போட்டுவிடலாம். ஆனால் நாகம் அவ்வாறு ஏமாற தயாராக இல்லை. வெளியே பொறுமையாக காத்திருக்கிறது.. மரங்கொத்தியாலும் அச்சிறு பொந்துக்குள் மணிக்கணக்கில் ஒடுங்கி இருக்க முடியவில்லை...! உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று கீச்சிட்டு ஒலிஎழுப்பியது.. பிறகு மரத்தை கொத்தி கொத்தி சத்தமிட்டது. ஆயினும் அது நீண்டநேரமாக இவ்வாறே ஒலிஎழுப்பிக்கொண்டிருப்பதால் இம்முறை இதன்கூப்பாட்டை  அபய குரலாக ஏனைய பறவைகள் கருதவில்லை போலும்! பரிதாபம்... வாழ்வா ? சாவா? எனப்போராடியது.


அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. பாம்பு இருந்த கிளைக்கு கீழே இருந்த ஒரு பட்டுபோன கிளை ஒன்று ' மடக் ' என முறிந்துவிழ.. அதோடு சுற்றிவளைத்து பின்னிப்பிணைந்திருந்த கொடிகளும் மளமளவென சரிந்தன.. அந்த கொடிகளே அதற்கு மேல்கிளைவரையிலும் படர்ந்திருந்ததால் அதுவும் ஆட்டம்கண்டு சரிந்தது.. அதோடு அந்த பாம்பும் தடுமாறி சரிந்தது.

சற்றும் எதிர்பாராத இந்த நல்வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மரங்கொத்தி 'விருட்'டென பறந்தோடியது..!


முறிந்த கிளையும் சரிந்து விழுந்த கொடியும் ஒன்றோடு ஒன்று நன்றாக பிணைந்து சிக்கிக்கொண்டு.., கீழேவிழாமல் ஊசலாடி நிற்க.. அதில் இறுக பற்றி ஊர்ந்து இறங்கியது அந்த விரியன்பாம்பு..

இரையை இழந்த அதிருப்தியும் தன்னை நிலைகுலைய செய்ததன் வெறுப்பும் அதை சீற்றம் கொள்ளசெய்தது. கீழே

நேரெதிரே ஒரு மானிடன் சேற்றில் விழுந்து கிடப்பதையும் அவனே கிளை முறிந்ததற்கு காரணமாய் இருக்ககூடும் எனவும் அது உணர்ந்தது. ஆதலால் அது பற்களில் சுரந்த நஞ்சினை வாயினில் திரட்டிக்கொண்டு பிளவுண்ட நாவினை அடிக்கடி வெளியேநீட்டி.. வேகமாக முன்னேறி அந்த மானுடன் முகத்தினருகே தலைகீழாக தொங்கியபடி வந்து நின்றது....!


                   ***********


   ஆக்கூ உடலெல்லாம் சேற்றில் சிக்கியவனாய் ஒருகையை பற்றிய கொடியோடு சகதியில் புதைத்து மறுகையால் ஊன்றியெழ முற்பட்டான். ஆனால் முடியவில்லை.. மேலே அந்தரத்தில்  தொங்கியபடி நாகமும் நெருங்கிவிட்டது. 


பொதுவாக பாம்பிற்கு அஞ்சுபவனல்ல ஆக்கூ.. வெறும்கரங்களால் அதை பிடித்து விளையாடும் விபரீத குணம்கொண்டவன். தோழர்களுடன் சேர்ந்து இதற்குமுன் பல பாம்புகளை வேட்டையாடி பிடித்து, வகை பிரித்து இனம் கண்ட அநுபவம் உண்டு...! இருப்பினும் சீறுகிற பாம்பைக்காட்டிலும் மிகத்துடிப்பான வேகத்தில் இயங்கி அதை லாவகமாக பிடித்தால்தான் அது சாத்தியப்படுமே தவிர இப்படி ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என விழுந்துகிடக்கும்போது..? அதுவும் தலைக்கெதிரே நேர்மேலாக தொங்கிக்கொண்டிருக்கும் பாம்பிடம் தன் பாவனை பலிப்பது எங்ஙனம்..? என்பதை உணர்ந்து, செய்வதறியாது கிடந்தான். 


அது நெருங்க நெருங்க இவனுக்கு தொண்டை அடைத்தது. மூச்சும் இயல்பாய் இல்லை. 

அவனது மனக்கவலை யாதெனின்..,"மாதிறம் படைத்த ஆக்கூ போயும் போயும் ஒரு சர்ப்பம் தீண்டி செத்தான்.! என்றல்லவா எதிர்காலசந்ததிக்கு கதை சொல்வார்கள்.. நமது வீரவரலாறு இவ்வளவு சீக்கிரமாக அது ஆரம்பிக்கும்முன்னரே இப்படி அவசரகதியில் முடியபோகிறதே...!" என்பதாக இருந்தது. மேலும் "மறுபிறவி பற்றியெல்லாம் சென்னி ஏதோ சொன்னானே.. அது உண்மையா..? எனில் அடுத்து நாம் என்னவாக பிறப்பெடுப்போமோ..?"

என்றெல்லாம்... க்ஷன நேரத்தில், இத்தனை விதமான எண்ணங்கள் மின்னலென அவன் மனத்தில் வந்துதித்தன..!

எனினும் எக்காரணம் கொண்டும் பயந்துவிட கூடாது என்பதில் ஆக்கூ உறுதியாய் இருந்தான். 


"நஞ்சை வாயிலே கொணர்ந்து நாகம் ஊட்டும்போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே! "


என வீராப்பு காட்டியபோதிலும்..


நாகம் அவனை ஏறத்தாழ நெருங்கி சீண்ட முனையும் தருணத்தில் அவனது வலது கரம் அனிச்சை செயலாக முகத்தை மூடியது....!புறங்கை முகத்தை கண்களை தொட்டு மறைத்தவாறும் உள்ளங்கை பாம்பை நோக்கியுமாக இருந்தது. கையினில் மிகுந்த வலிதரும் கடியை அவன் எதிர்பார்த்தான். ஆனால் அது நடக்கவில்லை!


சீறி வந்த நாகம் அவன் கைகளை தன் பிளந்த நாவினால் தீண்டியது. அருகம்புல்லால் வருடுவதுபோல இருந்தது அவனுக்கு. இன்னும் பற்கள் எதுவும் உள்ளங்கையை பதம்பார்க்கவில்லை. மறுபடி மறுபடி ஆக்கூவின் கையில் ஏதோ ஆராய்வதுபோலவும் கோலம்போடுவதுபோலவும் பாவனை செய்தது.பிறகு அது தான்உண்டு தன்வேலைஉண்டு என தனி வழியே இறங்கி சென்று வளைந்து நெளிந்து ஓடி சருகுகளில் புகுந்து மறைந்துவிட்டது..!


சில நிமிடம்சென்றபிறகே ஆக்கூ கைகளை முகத்தைவிட்டு எடுத்தான். பாம்பு பவ்யமாக சென்றுவிட்டதை நம்பமுடியவில்லை அவனால்..!


தன் உள்ளங்கையை திருப்பி பார்த்தான்.. அதில் அழிந்தும் அழியாததுமாக அந்த வண்ணத்துப்பூச்சியின் நிறத்தோற்றமும் சிறிதளவு சகதியும் அப்பியிருந்தது!


பிறகு ஒருவழியாக எழுந்து ஓடையில் மறுபடி நீராடி மிஞ்சியிருந்த சுரைகுடுவையில் நீரை எடுத்துக் கொண்டு பத்திரமாக கரையேறினான். நன்னனின் ஆயுதங்களும் பொருள்களும் மரத்தடியில் கிடந்தன. ஏதோ விபரீதமான சம்பவம் நடந்திருக்குமோ என தோன்றியது அவனுக்கு. திடீரென ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டான், ஓடிப்போய் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். அடுத்த சில நொடிகளில் சலசலப்போடு  கண்சிமிட்டும் கணத்தில் அவ்வழியே அந்த கருஞ்சிறுத்தை கடந்துபோனது..! 

அது அப்பால் சென்றபிறகு வெளியே வந்தான் ஆக்கூ..


"அடா..டடா!  சரிதான்... இன்று நமக்கு மறுபிறவி பற்றிய புதிருக்கு பதில் கிட்டிவிடும் போலிருக்கே! " என நினைத்துக்கொண்டான்.


"அதுசரி.. இந்த நன்னன் என்ன ஆனான்..?"


       ***********************



       வாகை மரத்தின் பின்னாலிருந்து வெளிவந்த பொடியன், நன்னனின் அருகில் வந்து , " காலில் ஏதேனும் அடிபட்டுவிட்டதா.. ஏன் விழுந்துவிட்டீர்கள்..? எழுந்திருக்க இயலுமா.. அல்லது உதவிவேண்டுமா?" என்ற படி தன் சிறுகரத்தினை கீழே கிடந்த நன்னன் முன் நீட்டினான்.


நன்னன் அவனை ஏற இறங்க பார்த்தான்.. முழுதாய் மூன்றடிகூட அவன் உயரம் இருக்காது. உடலெங்கும் கருப்பு மஞ்சள் சிவப்பு வெள்ளை என கோடுகள் வரைந்திருந்தான். தலையில் சிறுகுடுமி.. அதில் கழுகின் இறகுகளால் மகுடம்போல அழகாய் சூடிஇருந்தான். கழுத்தில் மணிமாலை..ஒரு கொம்பு.. தாயம் போல ஏதோ ஒன்று. கையில் அவனை விட உயரமான வேல் ஒன்று ஏந்தியிருந்தான். இடையில் நார்கயிறுகளை கொண்டே இறுக்கமான ஒரு ஆடை.. அதில்சில நுண் கற்கருவிகள்.. மிருகதோலினால் செய்த பாதுகையில் கால்பாதங்களும் மூடியிருந்தன.


நன்னன் தானாகவே எழுந்து தன்முன் நீட்டியிருந்த அவன் பொடிகரங்களை பற்றினான்.

" நீ யாரப்பா..? அந்த சத்தத்தை எப்படி உண்டாக்கினாய்? " என வினவினான்.


" நானொரு சீடன். ஆனால் இப்போது என் ஆசான் அனுப்பிய செய்தியை ஒருவரிடம் கூற தூதாக வந்திருக்கிறேன்.. இதோ இந்த கொம்பிலிருந்துதான் அந்த ஒலியை எழுப்பினேன்..!" என்றவாறு நன்னனிடமிருந்து தன் கரத்தை விடுவித்து, தன்கழுத்தில் கட்டித்தொங்கிய  கொம்பை எடுத்து வாயில் வைத்து ஊதிகாட்டினான்.. நாராசமான ஒலி எழுந்து அந்த இடமே அதிர்ந்தது..! 


"ஐயோ! நிறுத்தப்பா...! என்னதான் அது என் உயிர்காத்த நாதம் என்றாலும் என்னாலும் கேட்க முடியவில்லை..! பார்ப்பதற்கு கொம்புபோல இருக்கே.. இது எந்த விலங்கினுடையது...?"


"அது எனக்கும் தெரியவில்லை.. ஆனால் இந்தபூமியில் வெகுகாலம் முன்பு வாழ்ந்து மறைந்த பெரிய விலங்கினுடைய‌ கொம்பு என என்தந்தை சொன்னார்.."


"ஓ.. அப்படியா ! இறந்து இத்தனைகாலம் கடந்தும் அது பிறருக்கு உதவுகிறதென்றால் ஆச்சரியம் தான்..!"


"நீங்களும் தனியாகத்தான் வந்தீர்களா...?"


"இல்லையப்பா! இல்லை! என் தோழன் ஆக்கூவுடன் தான் வந்தேன்... இந்த சிறுத்தைப்புலிதான் எங்களை பிரித்துவிட்டது..  நான் உடனே ஓடையருகே போயாகவேண்டும் ; பாவம் அவன் என்னைத்தேடிக்கொண்டிருப்பான்"


"ஓடையா..? நீர் இருக்கிறதா அதில்? வெகுநேரமாக தாகத்தில் இருக்கிறேன்.. நானும் வருகிறேனே.."


"ஓ தாரளமாக வா தம்பி...! ரொம்பதூரமில்லை... அருகில்தான்.. தெளிந்த நீரோட்டமாயிருக்கிறது... எனக்கும் மறுபடி பருகவேணும் போல இருக்கிறது....வா! பேசிக்கொண்டே போகலாம்.. "


(இருவரும் நடந்துகொண்டே உரையாடலை தொடர்ந்தனர்..)


"நீ எங்கிருந்து வருகிறாயப்பா? அந்நியமாக தெரிகிறது..ஏன் துணைக்கு யாரையும் கூட்டி வரவில்லை?"


"உங்களுக்கு  'ஒசக்கு மலை' தெரியுமா...? "


"ஓ..நிறைய கேள்விபட்டதுண்டு., ஆனால் சென்றதில்லை.."


" அதையும் தாண்டி வடக்கில் இருக்கிறது எங்கள் குடி. நான் ஒசகுமலையில்தான் ஆசான்வீட்டில் தற்சமயம் தங்கியிருக்கிறேன்... முக்கிய செய்தி என்பதால் தனியாக வரவேண்டிய சூழ்நிலை.."


" அப்படியானால் அது முக்கிய செய்தியாக இருக்காது... ஏதோ ரகசியசெய்தி என்று சொல்..!"


( பொடியன் புன்னகைத்தான்.. ஆனால் மறுபடி பேசவில்லை..)


"என்ன.. உனக்குள்ளேயே பேச தொடங்கிவிட்டாயா..? "


" அப்படி இல்லை..! வழியில் யாரிடமும் இதுபற்றி விவாதிக்க வேணாம் என்பது ஆசான் கட்டளை.. நீங்கள் வேறு எதாவது கேளுங்களேன்...!"


" தம்பி நீ என் உயிரை காத்தவன்! என்னால் உனக்கு ஒருபோதும் சங்கடம் நேராது.. ! உனக்கு மிகவும் நன்றிகடன் பட்டிருக்கிறேன்.. உன்னைப் பற்றிதான் தெரிந்துகொள்ள ஆவல் கொள்கிறேனே அன்றி நீ கொண்டுபோகும் செய்தியை பற்றி அல்ல.."


"அப்படியானால் சரி...! என் பெயர் பதுமன். வரும் முழுநிலவு நாளன்று எனக்கு 11 அகவை பூர்த்தி ஆகும். இயற்கையை அறிவதில் எனக்கிருந்த பேரார்வம் கண்டு என்னை ஒசகுமலை சான்றோரான மற்கலிபோதனாரிடம் சீடனாக சேர்த்துவிட்டார் என் தந்தை. இரண்டு ஆண்டுகளாக அவரிடம்தான் பயில்கிறேன்.... அவர்தான் இங்கு தன்நண்பரிடம் என்னை  தூது அனுப்பியுள்ளார்..!"


"நண்பரா..! அப்படியானால் இந்த கிழவேதியர் உன் ஆசானுக்கு நல்ல பழக்கமோ..?"


"என்ன வேதியர் என்றா சொன்னீர்கள்..? அட...! எப்படி நான் வேதியரை தான் பார்க்க போகிறேன் என்று கண்டுபிடித்தீர்கள்..? நான் அவர்பெயரை உச்சரிக்கவே இல்லையே..!?" என பதுமன் படபடத்தான்...


நன்னன் மெல்ல குறுநகை புரிந்தபடியே...

" பதறாதே பதுமா! இந்த காட்டில்தான் முன்பு எங்கள் குடிகள் எல்லாரும் வாழ்ந்தார்கள்.. ஆனால் நாளடைவில் மிதமிஞ்சிய நீர்த்தேவை பொருட்டும் உணவுபொருள் நாடியும் எல்லாரும் வடமேற்கில் ஆற்றோரமாக இடம்பெயர்ந்து போய்விட்டார்கள்.. இதோ இந்த வேதியர் ஒருவரைத் தவிர.. இவர் இவ்விடம் விட்டு நகர மறுத்துவிட்டார். இவரை தவிர இந்த வனாந்திரத்தில் வசிப்போர் என்று யாருமில்லை...! ஒருவேளை வழியில் இங்கு வேறுமனிதர் எவரேனும் தென்படுவாராயின் அந்நபர் ஒன்று இந்த வேதியரை காணசெல்பவராய் இருக்கணும்..அல்லது , பார்த்துவிட்டு திரும்பியவராய் இருக்கணும்..அதனால் இங்கு நீ செய்தி கொண்டுவருவதாய் சொன்னபோதே அது வேதியருக்காகத்தான் இருக்கும் என்று யூகித்தேன்.. என்ன.. என் யூகம் சரிதானே?"


"ஆகா.. அற்புதம்! அப்படியானால் நீங்களும் அவரை காணதான் போகிறீர்களா..? என் வேலை வெகு சுலபமாயிற்றே..தனியாக புறப்பட்ட எனக்கு முடிவில் ஒரு துணையும் கிடைத்துவிட்டது..!"


"பலே! பதுமா..பலே! நீ கெட்டிகாரன்தான். என் கூற்றையே வைத்து என்னையே மடக்கி விட்டாயே.. ஆம் நானும் அவரையே பார்க்க போகிறேன்.. அதுவும் கூட ஒரு ரகசியம் சம்மந்தமாக தான்..!"


"ஓ...! அப்படியானால் உங்கள் இரகசியம்....., நிச்சயம்.. ஒரு கல்லை பற்றியதாகத்தான் இருக்கும்..! அதிலும் அதுஒரு கரிய நிறமான..கருப்புக்கல்...!"  என்று அந்த பொடியன் பதுமன் சொல்லவும்.. இப்போது நன்னன் வெளவெளத்து போனான்... மனதுக்குள்ளே ஆயிரம் கேள்வி ஐயாயிரம் ஐயங்கள் தோன்றி கொண்டே இருந்தன...!

"கருப்பு கல் பற்றி இவன் எவ்வாறு அறிவான்? அப்படியே தெரிந்தாலும் அதுபற்றி விசாரிக்க தான் வேதியரை அணுகுகிறோம் என்பதை இவனால் எப்படி யூகிக்க முடிந்தது.. உண்மையில் இவன் யார்? வயதுக்கு மிஞ்சிய விஷயவாதியாக இருக்கிறானே!" 

என்றவாறு நன்னனின் மனோரதம் ஓடிக்கொண்டிருக்க... ,


"என்ன ஆயிற்று ? என்னுடைய யூகம் சரியா கூறுங்கள்...!"


"என்ன யூகமா? இல்லவே இல்லை இது ஏதோ மந்திர ஜாலம்! 'ஒசகுமலைவாசிகள் மந்திரதந்திரங்களில் வல்லவர்கள் என்றும்...அவர்கள் மண்பாறையை பொன்பாறை யாகவும்.. பாயும்நீரை பளிங்கு கல்லாகவும் மாற்றுவார்கள் ...அகத்தில் நினைப்பதை  முகத்தில் படிப்பார்கள்.. வசியம் செய்வதில் வல்லவர்கள்..சித்துவேலை செய்யும் பித்தர்கள்.. ' என்றெல்லாம் எங்கள் குடிவாசிகள் பேச கேள்விப்பட்டிருக்கிறேன்.. அது உண்மை தான் என்று இப்போது உணர்கிறேன்...ஆக., நீயும் உன் ஆசானும் மந்திரவாதிகள் தானே?


பதுமன் நடப்பதை நிறுத்திவிட்டு சிறிதுநேரம் யோசனையில் ஆழ்ந்தான்... பிறகு பொறுமையாக.. , "உங்கள் குடிவாசிகள் கூறியவை எல்லாம் உண்மைதான்... மண்ணை பொன் ஆக்கவும் நீரை படிகமாக்கவும் மனிதர்களை வசியபடுத்தவும் ஒசகுமலை வாசிகளுக்கு  நன்றாகவே தெரியும்.. ஆனால் அதற்கு அவர்கள் மந்திரவாதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை...! ரசவாதம் கற்றறிந்த ரசவாதிகளாக இருந்தாலே போதுமானது!" என்றுகூறி முடித்தான்..



"ரசவாதமா..? சரிபோகட்டும்.. அது என்ன கருமமாவது இருக்கட்டும்  அதனால் இன்னொருவரது உடைமை இன்ன நிறம்.. இன்னபொருள்.. இன்ன தன்மை  என்று பார்க்காமலேகூட கூற முடியுமா?"


"உடமை அவரிடம் இருக்கும்வரை அது இயலாது.. ஆனால் என் கரங்களுக்கு வந்த பிறகும் அதைப்பற்றி சொல்லதெரியாவிட்டால் நான் மகா ரசவாதி மற்கலிபோதனாரின் சீடனாக இருக்க முடியாதல்லவா..?"

என்று கூறிவிட்டு, தன் கரத்தை நீட்டினான் பதுமன்.. அவன் உள்ளங்கையில் அந்த கருப்புத்தனிமம் இருந்தது!


அதை பார்த்த உடனே திடுக்கிட்ட நன்னனின் கை தானாக அவன் இடையை தழுவியது.. அதில் அக்கல் இல்லை.. மூங்கில் குழாயிலிருந்து அதை ஆக்கூ எடுத்து தந்ததும் அதை தன் இடையில் சொருகியதும் ஞாபகம் வந்தது.. எனில் சிறுத்தைவிரட்டி கீழே விழுந்தபோது அதுவும் கீழே விழுந்திருக்கும்.. என்றும் அதையே இந்த பொடியன் எடுத்துவைத்திருக்க கூடும் எனவும் யூகித்தான்..



"நீங்கள் யோசிப்பது சரிதான்.. சிறுத்தை விரட்டி கீழே விழுந்தபோது இதுவும் சற்று தள்ளி வந்து விழுந்தது. உங்களிடம் ஒப்படைக்கதான் எடுத்தேன்.. பேச்சு சுவாரஸ்யத்தில் தாமதித்துவிட்டேன். இந்தாருங்கள் இதை எடுத்துக்கொள்ளுங்கள்..!"


பதுமனிடமிருந்து அதை வாங்கியபடியே..நன்னன்,

"அடப்பாவி இப்போதும் மனதில் நினைத்ததை சொல்லிவிட்டாயே... உனக்கு தெரியாதது என எதாவது உள்ளதா இந்த உலகில்....?"



"ஓ.. எவ்வளவோ உள்ளதே..

அவ்வளவு ஏன் உங்கள் பெயர்கூட சற்றுமுன் வரை தெரியாமல்தான் இருந்தது... நீங்கள் இன்னும் என்னிடம் சொல்லவே இல்லை..!"


"சற்றுமுன் வரை என்றால்...? இப்போது தெரிந்துவிட்டதா என்ன.. உனக்கு?"


"ஆம் அப்படித்தான் நினைக்கிறேன்..! உங்கள் பெயர் நன்னன் ! சரியா?" என்றான் பதுமன்..


நன்னன் உச்ச கட்ட வியப்பில்

கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போய்விட்டான்....! (தொடரும்)


-சூரியராஜ்


2 Comments

  1. அடேங்கப்பா...பொடியன் பெயரை எப்படி கண்டுபிடித்தான்?

    ReplyDelete
    Replies
    1. அதை அந்த பொடியனே அடுத்த அத்யாயத்தில் விளக்குகிறான் வாசியுங்கள்.

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு