Trending

குறுந்தொகை 4 சிறுகதை - குகன் (kurunthogai 4 story)

நெஞ்சு நோகிறது

kurunthogai


காற்று வேகமாக வீச கடல் அலைகள் சீற்றத்துடன் துள்ளி விளையாடுவதை மேலிருந்து ரசித்தபடி நிலவு தேவதை பிரகாசத்தை அளித்தாள். சன்னலின் ஓரத்தில் அவளை பார்த்தபடியே சிந்தனை சீற்றத்தில் மூழ்கினால் மணிமேகலை. கடந்தகாலங்களில் நடத்த நிகழ்ச்சிகள் அவள் சிந்தையில் இறந்து போகாது நினைவில் வந்ததன.

அன்று நடந்த நிகழ்வு அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு அவளது பள்ளியில் நடந்த நிகழ்வு அது.


'ஏ மணிமேகல… ஏ…. இங்க பாரு'


'அவ உன்ன பாக்கமாட்டா , பேசவும்மாட்டா!!!'


'ஏன்?'


'அவ படிக்கனும் இப்பெல்லாம் உன்ன லவ் பண்ண முடியாதாம்'


'சரி படிக்கட்டும். அவள இனி நான் டிஸ்டப் பண்ண மாட்டன். இப்ப மட்டும் ஓகே சொல்லு'


'அதெல்லாம் முடியாது'


'ஏ நான் உன்ட பேசல! அவகிட்ட பேசுரேன், நீ சும்மா இரு!!'


'இங்க பாரு… அவ சொல்ல சொன்னததான் நானும் சொல்றேன். இப்ப உன்ன அவளால லவ் பண்ண முடியாது. படிப்பு பெய்டும்'


'சரி எப்பதான் என்ன லவ் பண்ணுவாளாம்'


'நீ நல்ல வேலைக்கு போய் வாழ்க்கையில உருபுடு….. அதுக்கப்பறம் பாப்போம்!'


மணிமேகலை லேசாக தன் தோழியைப் பார்த்தாள். 


'நல்ல வேலைக்கு நான் போனத்துக்கப்பறம் லவ்வ சொன்னா நீ ஏத்துகனும்!! '


என்று மணிமேகலை வகுப்பறைக்கு அருகில் உள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவன் அஜித் தன்னம்பிக்கையுடன் கூறினான்.


செல்போன் அதிர்ந்த சத்தம் கேட்கவே நினைவுக்கு வந்தாள் மணிமேகலை.


சற்று சலிப்புடனும் வருத்தத்துடனும் அந்த செல்போனை எடுத்து காதில் வைத்தாள்.'இன்னக்கி நைட் என்னால.. வீட்டுக்கு வர முடியாது நீ சாப்டு தூங்குமா!'


'சரிங்க'


'சரி பாத்து பத்தரமா இரு!..


'ம்ம்' என்ற முனகலுடன் இணைப்பை துண்டித்து மீண்டும் அந்த சன்னலின் அருகில் வந்தமர்ந்தாள்.


மீண்டும் இரண்டு வருடத்திற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது…


கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்


'மணிமேகலை கொஞ்சம் நில்லு'


அஜித்தின் குரல் அது. மணிமேகலை சட்டென நின்றாள்.


'நீ சொன்ன மாதிரி எனக்கு வேல கிடச்சிட்டு, அதுவும் சென்னைல! இப்ப சொல்லு உன் விருபத்த'


மணிமேகலை மேலும் நடக்கத்தொடங்கினாள்.


'நாலு வருசம் பொய்டுச்சி இப்ப கூட வேற எந்த பொண்ணையும் நான் பாக்கல. எல்லாம் உனக்காக தான். நாளைக்கு காலைல நீ காலேஜ் போறப்ப வருவன். இன்னக்கி நீ பேசாமா போகலாம் நாளைக்கு நீ உன் முடிவ சொல்லிதான் ஆகனும்' என்று கூறி கிளம்பினான் அஜித்.


மணிமேகலை எல்லா விஷயங்களையும் தன் தோழி சபிதாவுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அவளிடம் இருந்து எதையும் மறைக்காமல் அனைத்து விஷங்களையும் அப்படியே சொல்லிவிடுவாள். அத்தகைய அடர்த்தியான அந்தரங்க நட்பு இருவருக்குள்ளும்.


அன்றைய இரவு மணிமேகலை சபிதாவுக்கு போன் செய்தாள். அன்று நடந்தனவற்றை எல்லாம் நடந்தவாறே கூறினாள்.


'நீ எதுக்கும் யோசன பண்ணிக்க. அவன் நல்லவன் தான?'


'நல்லவன் தான்…. ஆனா??'


'ஆனா என்ன?'


'இல்ல வீட்டுக்கு தெரிஞ்சா?'


'தெரிஞ்சா என்ன? அவன் நல்லவன்னு சொல்லுற. சின்ன வயசுல இருந்து அவன பாத்துருக்க. உங்க வீட்டுக்கு எதிர் வீடுல தான் இருந்தானு சொல்ற. அப்ப ஏன் பயப்புடுற இன்னும் ஒரு வருசத்துக்கு அப்பறம் அவனையே உங்க வீட்ல பேச சொல்லு.'


தனது தோழி சொல்லியதை யோசித்து பார்த்தபோது, மணிமேகலைக்கு சரியெனப் பட்டது.


மறுநாள் அவன் வந்து பொறுமையாக கேட்க. அவளும் தன் சம்மதத்தை மென்மையாகத் தந்தாள்.


ஒருவருடம் செல்லசண்டை, பேரன்பு, சிறுபிரிவு, மென்னணைப்பு போன்றவற்றுடனே கழிந்தது.


அவளது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் முடிந்தது. இருவரும் சென்னையின் கடற்கரையோரத்திலுள்ள சம்திங் நியூ அப்பார்ட்மெண்டின் ஏழாவது மாடியிலுள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.


அந்த வீட்டின் சன்னலை திறந்தால் கடல் காற்று தேகத்தை தீண்டும்.


'அதே சன்னல் அருகில் அமர்ந்து தற்போது, என்ன ஒரு சுகமான நாட்கள் என்று நெஞ்சுக்குள் பேசிக்கொண்டாள்.


மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அதே நினைவுகளோடு நித்திரையில் ஆழ்ந்தாள்.


'டிரிங்… டிரிங்…'என்று வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, இமைகளை திறந்து கடிகாரத்தை நோக்கினாள். அது காலை 6 மணியை காட்டியது.


மெல்ல நடந்து வந்து கதவை திறந்தாள். களைப்புடன் கணவர் வந்திருப்பதை, அவரது முகக்குறிப்பால் அறிந்தாள். 


அவன் குளித்து வருவதற்குள் நேற்று எடுத்து வைத்த இட்டிலியை வைத்து உப்புமாவை தயார் செய்து பரிமாறினாள்.சாப்பிட்டு விட்டு எழுந்தான் அஜித். அவனது போன் ஒலி எழுப்பியது. 'சரி சார்…ஓகே சார்….இதோ கிளம்பிடுறேன்'


'என்ன ஆச்சுங்க?'


'இல்ல... இன்னிக்கி கம்பெனி விசியமா எல்லாம் பெங்களூர் போனுமா. ஏதோ பெரிய ப்ராஜக்ட் வருதான். அதான் இன்னக்கி மதியம் கிளம்பனும்'.'சரி பெய்ட்டு எப்பங்க வருவிங்க' என தன் சோகத்தை உள் வைத்துக்கொண்டு சாதரணமாக வினவினாள்.


'ஒரு நாலு நாள் ஆகும்'


மணிமேகலையின் சோக கானம் 'ம்ம்' என்றே முடிந்துவிட்டது.


அவனும் கிளம்பி சென்றான்.


அவள் இந்த அப்பார்ட்மெண்ட்க்கு வந்து ஒருவருடம் ஆகிறது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. ஏனெனில் எல்லோரும் தங்களது வேலைகளிலே கதியென இருப்பர். காலையில் சென்றால் இரவு தான் பலரை அங்கு காணலாம். ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் வாய்ப்பு இல்லாத சூழல் அங்கு.


வாரத்திற்கு ஒரு முறை தனது போனில் பெற்றோரிடம் பேசுவாள், அது அவளது மனதுக்கு ஆறுதல் தரும்.


இந்த வருத்தத்தை அவர்களிடம் கூறினாள் அவர்களது மனம் தான் புண்படும் என்று சோகத்தை மனதிற்குள்ளே அடக்கிக்கொண்டாள்.


மிகுந்த மனவேதனை காரணமாக இதை யாரிடமாவது கூறி அழுது தனது மன பாரத்தை இறக்கி வைக்க வேண்டும் என்றெண்ணிய அவள், தனது நெருங்கிய கல்லூரி தோழியான சபிதாவிற்கு போன் செய்தாள். 


தன்னை சுத்தி சுத்தி வந்து காதலித்து. இமைகள் எறியும் போது அதை தனிப்பதற்கு கண்ணீர் போல இருந்த அவர். தற்போது வேலையிலும், பணத்திலும் மட்டுமே குறியாக இருந்து தன்னுடன் உறவு கொள்ளாமலும், அவர் தன்னை தனிமையில் விட்டு பிரிந்து செல்வதாலும் அவளது மனம் வருத்தமுற்றது. தான் கண்ணீர் கடலில் தவிப்பதாக தன் தோழி சபிதாவிடம் வெளிபடையாக தனது மனவருத்தத்தை கூறினாள் மணிமேகலை.


தோழி சபிதா, அவளுக்கான ஆறுதல் உரையை கூறத்தொடங்கினாள்.


-குகன்


குறுந்தொகை 4 பாடல்


நோம்என் நெஞ்சேநோம் என்நெஞ்சே

இமைதீய்ப் பன்னகண்ணீர்தாங்கி

அமைதற் கமைந்தநங்காதலர்

அமைவிலர் ஆகுதல்நோம் என்நெஞ்சே


ஆசிரியர் - காமஞ்சேர் குளத்தார்


குறுந்தொகை 4 உரை


நோகிறது என் நெஞ்சம் நோகிறது. இமைத் தீயை தணிப்பதற்காகவே கண்ணீர் எழுகிறது. அதுபோல அமைந்த என் காதலர், இப்போது என்னோடு சேர மறுக்கிறார், பிரிந்து இருக்கிறார் அதனாலே நோகிறது என் நெஞ்சம்.


என பிரிவு ஆற்றாத தலைவி தோழியிடம் கூறினாள்.

1 Comments

  1. கதையின் பின்னணியில் கச்சிதமாக திணையை காண்பித்தது வெகு பிரமாதம்.. காமஞ்சேரரே மறந்து விட்டாலும் கூட குகனார் விடவில்லை..!

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு