Trending

புராண கதைகளை எப்படி புரிந்து கொள்வது?


puranam


பல்வேறு கட்சிகள் இன்றளவும் புராண கதைகளை கூறி, 'இப்படி பொய்யை அளந்து கட்டியவர்கள் தான் உலகை படைத்தார்களாம்' என்று கேலி பேசுகிறார்கள். 


புராண கதைகள் பொய்யை சொல்லவில்லை. கற்பனை மூலம் நற்பண்பை விதைக்கிறது. அதற்காகவே புராண கதைகள் எழுந்திருக்க வேண்டும். அதிலும் முழுக்க முழுக்க பொய்யே இருக்காது. உண்மை கலந்த கற்பனை நமக்கு பொய்யாக தெரிகிறது.


இதில் புராண கதைகளை எப்படி படித்தறிவது என்பதைக் கூறுகிறேன். அதில் இருக்கும் பொய்களையும் உண்மைகளையும் நான் வகுக்கப் போவதில்லை. மாற்றாக உண்மையிலே அது எதற்காக எழுந்தது என்பதை புரிய வைக்கிறேன்.


இந்த கதை பலராலும் விமர்சிக்கப்பட்ட கதை. ஐயப்பன் பிறப்பு கதை. அதற்கு முன் கதை பலராலும் படிக்கப்பட்ட கதை. அது தான் விஷ்ணு ஆமையாக (கூர்மமாக) அவதாரம் எடுத்து மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்னும் பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்கும் நிகழ்வாகும். அப்போது கூட அதிலிருந்து வந்த நஞ்சை ஈசன் வாங்கி குடிப்பார். அது அவரது தொண்டைக்கு போகும் போது மனைவி பார்வதி அதை அழுத்தி பிடித்து விஷத்தை நிறுத்துவார்கள். பின் விஷ்ணு மோகினியாக மாறி அரக்கர்களை ஏமாற்றி, அமிர்தத்தை தேவர்களுக்கு தருவார். நல்லதொரு கதை இது.


பல்வேறு மேடைகளில் இக்கதை விமர்சிக்கப்பட்டு விட்டது. 


அது எப்படி ஒரு ஆமையால் மலையை தாங்க முடியும்? 


அது எப்படி பாம்பை கயிறாக்க முடியும்? 


அது எப்படி நஞ்சு தொண்டையிலே நிற்கும்? 


சரி தொண்டையிலே நின்றாலும் அது தலைக்கேறி ஈசன் மாண்டிருக்க வேண்டுமல்லவா? 


நன்மை செய்யக்கூடிய விஷ்ணு ஏன் அரக்கர்களை ஏமாற்ற வேண்டும்?


அரக்கர்களை தமிழர்களாகவும் தேவர்களை பிராமணர்களாகவும் காட்டுவது தான் புராண கதையின் நோக்கமா?


பிறகு ஈசன் விஷ்ணுவுடன் கலந்து ஐயப்பன் பிறந்தாராம். அது எப்படி ஆணும் ஆணும் ஒன்றினைய முடியும். அவர்களுக்கு எப்படி பிள்ளை பிறக்கும். இப்படி ஒரு கேவலமான கதை தான். புராணமா?


இப்படி எல்லாம் பலரும் பேசி இருக்கிறார்கள். புராண கதைகளை அவர்கள் புரிந்து கொண்ட விதமே தவறு. நேரடி அர்த்தங்களை புராண கதைகளில் நாம் எடுத்துக் கொள்ள கூடாது. அவை பெரும்பாலும் கற்பனையாகவே தான் இருக்கும். 


இந்த பாற்கடல் அமுத கதையை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.


தேவர்களுக்கு அரக்கர்களால் பிரச்சனை வருகிறது. பல தேவர்கள் மாண்டு போகிறார்கள். உடனே தேவர்கள் சாகாவரம் வேண்டி விஷ்ணுவிடம் போகிறார்கள். விஷ்ணு பாற்கடலை கடைந்தால் அமுதம் வரும் அதை குடித்தால் சகா வரம் கிடைக்கும் என்கிறார். அதை கடையும் அளவிற்கு தேவர்களிடம் ஆள் பலம் இல்லை. அதனால் விஷ்ணு அரக்கர்களிடம் உதவி கேட்க சொல்கிறார். எதிரியிடமே உதவியா என்று தேவர்கள் யோசிக்கிறார்கள். அமுதம் உங்களுக்கு தான் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஷ்ணு கூறி அவர்களை அனுப்புகிறார். அவர்களும் அரக்கர்களிடம் உதவி கேட்கிறார்கள். அரக்கர்கள் அந்த அமுதத்தில் பாதி எங்களுக்கும் வேண்டும் என்று கட்டளை இடுகிறார்கள். தேவர்கள் அதை ஒப்புக்கொண்டு அரக்கர்களுடன் பாற்கடலை கடைகிறார்கள்.


இதையே தான் வள்ளுவர் கூறுகிறார்.


கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து  மாணாத செய்வான் பகை


நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து



நம் வலிமை குறையும் போது பகைவரிடத்தில் அதை காட்டாது அவர்களை அனுசரித்து நடக்க வேண்டும்.


பாற்கடலை கடைந்த உடன் அதிலிருந்து அமுதத்திற்கு முன் நஞ்சு வெளியாகிறது. தேவர்களும் அசுர்களும் அந்த நஞ்சின் நெடியை தாங்காது சுருண்டு விழுகிறார்கள். உடனே ஈசன் அங்கு வருகிறார். அந்த நஞ்சை எடுத்து குடிக்கிறார். 


இங்கு தான் பகைவர்கருள்வாய் எனும் சிந்தனையானது வெளிப்படுகிறது. 


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை


வறியவர்க்கு உதவ முடியவில்லையானால் சாவதே இனியதாகும் என்கிறார் வள்ளுவர். இதைத் தான் இங்கு ஈசன் செய்ததாக இப்புராணக் கதை காட்டுகிறது.


ஈசனின் தொண்டைப்பகுதியில் நஞ்சு இறங்கும் போது அவரின் மனைவி பார்வதி தோன்றி ஈசனாரின் கழுத்துப் பகுதியில் தன் விரலை வைத்து அவரை காப்பார்.


கணவனின் துன்பத்தை தன்னதாக்கிக் கொண்டு அவரை காப்பதுவே நல்ல மனைவியின் குணமாகும் என்ற அறக்கருத்தை இது போதிக்கிறது.


பின் அமுதம் வரும். அதை அள்ளி கொடுப்பதற்கும் அரக்கர்களை ஏமாற்றுவதற்காகவும் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமுதத்தை பரிமாற வருவார்.



பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்


செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை



மறுமை காலத்தில் இருக்கும் போது பகைவரைக் கண்டால் பணிந்து போக வேண்டும், வெல்லும் காலம் வந்தவுடன் பகைவரை வெல்ல வேண்டும் என்னும் வாழ்வியல் கருத்தை இப்புராணம் உணர்த்துகிறது.


அதற்கு அடுத்து தான் ஈசனார் மோகினி உருவத்தோடு உள்ள விஷ்ணுவுடன் இணைந்து ஐயப்பனை பெற்றெடுப்பார் என்று கதை வரும்.


இப்படி கதை எழுந்ததற்கான காரணம் அன்றைக்கு சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பெரும் போரே நடந்து கொண்டிருந்தது. அதை தடுப்பதற்காக இருக்கலாம். அல்லது சைவர்கள் தங்கள் கடவுளான ஈசனின் அடிமை தான் விஷ்ணு என்பதற்கு கூட இப்படி புனைந்திருக்கலாம். அன்றைய காலத்தில் மனைவியை அடிமைப் போலே நடத்தினார்கள்.


எல்லா புராண கதைகளும் ஒரு கடவுளை உயர்த்தி கூறி பல நல்ல அறக்கருத்துகளை கொண்டிருக்கும். அந்த கடவுளை உயர்த்துவதற்காக அவர்கள் பல கற்பனைகளை சேர்த்திருப்பார்கள். அறிவுடையோர் அன்னப் பறவைப்போல் அதை பிரிந்தறிந்து பொருள் கொண்டு விடுவர். ஓர் இனக்குழுவை தூற்றி பேச வேண்டும் என்ற எண்ணமுடையோரே அதன் கற்பனைகளில் இருக்கும் ஆபாசங்களையும் நம்ப முடியாத நிகழ்ச்சிகளையும் காண்பர். 


புராணங்களின் மூலம் பல நல்லறங்களை கதை போல தெரிந்து கொள்ளலாம், பொய்யென கருதி படிக்காது விட்டு விடாதீர்கள்.


குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் 

மிகைநாடி மிக்க கொளல்.


-ஈசதாசன்

1 Comments

  1. நல்லன காண்போர்க்கு நல்லவை மட்டும் தோன்றும்.தீயன எண்ணம் கொண்டோர்க்கு தீயவை மட்டுமே கண்ணில் படும்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு