Trending

மாதொருபாகன் - சிறுகதை

மாதொருபாகன் - குகன்

மாதொருபாகன் - சிறுகதை


"அக்கா ஒவ்வொருத்தர்கிட்டயா வருவேன், காச எடுத்து வச்சிகிங்க எல்லாரும்" என்று பேருந்தில் ஏறி 'இன்ஜின் பெட்டியின்' மேல் அமர்ந்த படியே கூறினாள் ஒரு திருநங்கை. பின் வருசையாக  இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம் கைகளைத் தட்டிக் கொண்டே ஒரு கையை நீட்டினாள். சிலர் யாசகம் தந்தனர். பலரோ இல்லை என தலையாட்டி சமிக்கை செய்தனர். அவளும் யாசகம் தந்தவர்களை வாழ்த்தி நகர்ந்து கொண்டே பேருந்தின் கடைசி இருக்கையை நோக்கி வந்தாள்.


"டேய் அது வருது டா"


"அடேய் என்ன அதுக்கிட்ட கோத்துகீத்து உட்டுடாத" இவ்வாறாக இறுதி இருக்கையில்  அமர்ந்திருந்த மாணவர்கள் முணுமுணுத்து கேலி செய்து கொண்டிருந்த வேளையில்


அந்த திருநங்கை இவர்களிடம் யாசகம் பெற கையை நீட்டினாள்.


"அக்கா காசு இல்லக்கா"


"யேன் ராசா, பைசா இல்லனு சொல்ற.? எப்புடி பஸ்ல போவ? நான் வேனா காசு தரவா.?"


"இல்லக்கா எங்க எல்லோருக்கும் பஸ்பாஸ் இருக்கு"


"அது கெட்டுது போ..."என்று கூறிக்கொண்டே


"தம்பி நீ தரியா?" என படியின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு மாணவனிடம் கேட்டாள். அவனும் அச்சத்துடனே பையில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தை தந்தான்.


"நீ நல்லா இருப்ப" என்று கூறி அவளது கையை அவனது தலையில் வைத்து ஆசி தந்து பேருந்திலிருந்து வெளியேறினாள்.


"டேய் மாதொருபாகா என்ன உனக்கு மட்டும் தனி கவனிப்பு" என்று அருகில் அமர்ந்திருந்த மாணவர்கள், அவனை கேலி செய்தனர்.


பேருந்தில் இருந்து சிறு தூரமே சென்ற திருநங்கையின் காதில் விழுமாறு முதியவர் ஒருவர் பேசத் தொடங்கினார். "ஓரே தொல்லையா இருக்கு பஸ்ல ஏறுனா போதும், வந்துடுந்துங்க கைய தட்டிகிட்டு

இந்த மானங்கேட்ட பொழப்பு பொழைக்கறத்துக்கு சாவலாம்". இதைக் கேட்டு கோபமடைந்த திருநங்கை மீண்டும் பேருந்தில் ஏறி அந்த முதியவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாள். தன் பிறப்பை கேலி செய்யும் அந்த முதியவரின் பேச்சைக் கேட்டு கண்களில் நீர் பெருக்க பேருந்திலிருந்து அவள் வெளியேறியதை கண்டான் மாதொருபாகன்.


அவன் கண்ட காட்சி அவனது சிந்தனையில் பல கேள்விகளை எழுப்பியது. அந்த கேள்விக்கான விடை நேரடியாக அவர்களிடமே கேட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு கட்டினான்.


ஓடின சில வருடங்கள்


ஆயினும் மாதொருபாகனின் கூச்ச சுபாவம் மற்றும் வெகுளித்தன்மை மாறவில்லை.


அவனின் நண்பன் சக்தி மட்டுமே அவனை புது புது விசயங்களில் ஈடுபடுத்தி அவனது பயம் மற்றும் கூச்சம் ஆகியவற்றை நீக்கும் வகை செய்தான்.


புதிதாக சக்தி பொது மக்களிடம் பல்வேறு தலைப்புகளில் கருத்து கேட்கும் ஒரு "யூட்யூப் சேனல்" தொடங்கி அவனுடன் மாதொருபாகனையும் இணைத்து கொண்டான். 'நம் யூட்யூப் சேனலில் முதல் கண்டன்ட் நீ தான் யோசித்து சொல்ல வேண்டும்' என கண்டிப்புடன் கூறி விட்டான் சக்தி.


மாதொருபாகனும் சட்டென்று திருநங்கைகள் ஏன் யாசகம் பெறுகின்றனர். அவர்களை மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என கூற சக்தியும் 'சூப்பர் ஐடியா' என்று உற்சாகமானான்.


அதன் படியே இருவரும் பேருந்து நிலையத்திற்கு பேட்டி எடுப்பதற்காக சென்றனர்.


ஓடும் பேருந்தில் இறங்கி சென்ற ஒரு திருநங்கையிடம் பேட்டி எடுக்க அருகில் சென்றபோது, அன்று பார்த்த அதே திருநங்கை தான் இவள் என மாதொருபாகன் அடையாளம் கண்டு கொண்டான்.


"அக்கா நான் கேக்குறேனு தப்பா நினைச்சிகாதிங்க நீங்க ஏன் மத்தவுங்க கிட்ட பிச்சை கேக்குறிங்க உழைச்சி வாழலாம்ல" என்று சிறிது பதைபதைப்புடனே கேட்டான் மாதொருபாகன்.


"எவனாவது எங்களையும் மனுசனா மதிச்சா வேல கொடுப்பானுங்க, எங்கள பாத்தா எதோ நாய் மாதிரி வெரட்டி அடிச்சா நாங்க இத தவிர வேற என்ன செய்றது தம்பி"


"நீங்க சாப்புடுறது மத்த செலவு போக மீதி காச என்ன பண்ணுவீங்க?"


"என்ன போலவே வீட்டில இருந்து துரத்தப்பட்ட சில பொண்ணுங்க படிக்கனும்னு ஆச படுறாங்க அவங்க செலவுக்கு கொடுப்பேன்"


"அரசு உங்களுக்கு சலுகை, இல்லை இருப்பிடம்  ஏதாவது தராங்களா?"


"அரசு தரது இருக்கட்டும் எங்களையும் மனுசங்கனு மதிச்சி இவுங்களுக்கும் வாழ்க்கை ஆசை எல்லாம் இருக்குனு புரிஞ்சிகிட்டு உங்க மனசுல சின்ன இடம் தந்தா போதும்"


"எங்க எல்லாரையும் இப்ப உள்ளவுங்க ஏதோ அருவருப்பானவுங்களா நினைச்சிடாங்க. ஆனா உங்கள மாதிரி, வரும் தலை முறையாவது எங்களுக்கு ஒரு வேல போட்டு தந்திங்கனா அது கூட வேனாம்பா,  நாங்களும் ஒரு மனித பிறவி தான்னு நினைச்சாலே போதும். தப்பான தொழிலுக்கு போவதோ இல்ல பிச்சை எடுக்கறதோ எங்களுக்கு தொடர்கதை ஆகாது"


திருநங்கையின் இந்த வலி நிறைந்த பேச்சைக் கேட்டு கண் கலங்கிய மாதொருபாகனை கண்ட இன்னொரு திருநங்கை 'நீ நல்லா இருப்ப கண்ணு' என்று ஆசி வழங்கி புறப்பட்டாள்.


-குகன்


Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு