Trending

ஞானத்தைத் தேடி 3 - பாவம் கோபம்

 3.பாவம் கோபம்



பாவம் என்றால் என்ன? 


இதை செய்தால் பாவம் வரும், அதைச் செய்தால் புண்ணியம் வரும் என்றெல்லாம் சொல்கிறார்களே


நான் எங்கு சென்று அவைகளையெல்லாம் கணக்குப் பார்ப்பது?


நன்மை செய்த பலர் கஷ்டப் பட்டுக்கொண்டும் தீமை செய்யும் பலர் சுகமாக வாழ்ந்து கொண்டும் தானே இருக்கிறார்கள், அது எப்படி?


எதை விதைக்கிறாயோ அதையே அறுவடைச் செய்கிறாய் எனும் சட்டமே இங்கு தோற்றுப் போகிறதே


ஞானம் சொல்லும் எந்த தர்மமும் நம்பும் படியாகவே இல்லையே


இது போன்ற சந்தேகங்கள் எழுவது இயற்கையே


இதற்கான பதிலை இக்கட்டுரையின் இறுதி வரியில் தருகிறேன்.


ஒரு செயலைத் தொடங்கும் முன்னரே மனித புத்தி அதன் பலனை நினைத்து ஏங்கும்.


அந்த தொழிலால் வரும் இன்பத்தை எண்ணி ஆசையெனும் கற்பனையில் மூழ்கும், துயரமென்னும் சுழற்சியினுள் சிக்கும் வரை.


மனித மனம் எத்தனை நீச குணமுடையது தெரியுமா?


ஒரறிவு கொண்ட மரத்தின் பொறுமை கூட அதற்கு கிடையாது.


விதை விதைத்த உடனே முளை விடுகிறதா என்ன?


ஒரு மரத்தின் வளர்ச்சி போன்று தான் நீங்கள் செய்த நன் செயலின் பிரதி பலனும்.


நெல்லிக்காய் முதலில் கசக்கிறது.

உண்ட பிறகு இனிக்கிறது.


கஷ்டப்பட்ட மனிதர்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.


அவர்களின் முன் வாழ்க்கை மிகவும் கசப்பாகவே இருக்கிறது.


திடீர் என்று மேலே வந்தவன், திடீர் என்றே கீழே போகிறான்.


அவனின் அசுர வளர்ச்சி, அந்த சிறிய அடியைத் தாங்காது அடங்கி ஒடுங்கிப் போகிறது.


அடிபட்டு அடிபட்டு எழுந்தவனுக்கோ எத்தனை பலமான அடியும் ஏற்கனவே பட்ட காயங்களுக்கு ஒத்தரம் கொடுப்பது போல இருக்கும்.


துயரங்களிலே வாழ்ந்தவன் அழுகையை நண்பனாக்கிக் கொள்கிறான்.


தலையணை ஈரமாவதால் அவன் தூக்கம் களைவதில்லை.


வடமொழி இலக்கியங்கள் பாவங்களை ஐந்தாகப் பிரித்தது அதற்கு பஞ்சமாபாவம் எனப் பெயராகும். அவை,


பொய்,களவு,சூது,கொலை,காமம் 


அந்த காலப் பாலை நிலத் தமிழர்கள் களவினை தொழிலாகவும் தர்மமாகவும் கொண்டிருந்தனர்.


மேலை நாட்டு வறட்சி பகுதியில் வாழும் மக்கள் தமக்கு இறைவனே உணவாய் படைத்ததாக சிறு உயிரினங்களைக் கருதினர்.


பின் அது அவர்களின் தர்மமாகவும் கருதப்பட்டது.


அதனால், அன்று பாவங்கள் ஒவ்வொருவரின் மனநிலைப் பொருத்து அமைகிறது என்பதை அறியமுடிகிறது. இன்றும் அப்படியே


சில அறிஞர்கள் பாவங்களில் குரோதம் எனும் கோபத்தையும் குறிப்பிடுகின்றனர்.


மனிதனிடத்தே இருக்கும் மிக ஆபத்தான குணம் எதுவென்றால்? அது கோபமே


அதனாலே அதைச் சேர்ந்தார்க் கொல்லி என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


உன் எதிரியை கோபமென்னும் அஸ்திரத்தை பயன்படுத்தி தோற்கடிக்கிறாயா?


நிச்சயம் அது அவனை தாக்குவது போல் நடித்துவிட்டு உன்னைத் தான் தாக்கும்.


இதை மிக அழகாக இராமாயணம் நமக்கு கூறுகிறது.


இலக்குவனின் கோபத்தால் சூர்பனகை தன் மூக்கை இழக்கிறாள்.


இலக்குவனின் கோபத்திற்கு ஆளான மூக்கில்லா சூர்பனகையை கண்ட ராவணனின் கோபத்தால் இராமன் தன் மனைவி சீதையை இழக்கிறான். 


இராவணனின் அந்த மூடக் கோபத்தால் இறுதியில் தன் உயிரையே இழக்கிறான்.


இங்கு கோபம் எத்தனை அழகாக விளையாண்டுள்ளது பாருங்கள்.


இவர்களின் கோபம் இவர்களுக்கு எதிராகவே செயல்படுவதை காண முடிகிறது.


இலக்குவனுக்கோ இராவணனுக்கோ கோப குணம் இல்லாமல் இருந்திருந்தால் இழப்பும் இருந்திருக்காது இதிகாசமும் இருந்திருக்காது.


கர்ணன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அர்ஜூனன் தன் பாணத்தை கர்ணன் மீது எய்துவார். அப்போது தர்ம தேவதை வந்து அந்த கணைகளையெல்லாம் மாலையாக்கி கர்ணன் மீது சாத்தும்.


அர்ஜூனன் வியந்து 'என்ன இது கண்ணா?' எனக் கேட்க


அதற்கு கண்ணன், 'தர்மம் அவன் தலையை காக்கிறது' என்பார்.


தர்மம் ஏதோ ஒரு வகையில் உங்களை காத்துக் கொண்டே இருக்கிறது.


பிறந்த குழந்தை தவறி கீழே விழுந்தாலும் காயப்படுவதில்லை, அப்படி ஒரு எலும்பமைப்பை பிறப்பிலே பெறுகிறது. வளர வளர அந்த அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.


பிரசவ காலங்களில் தாயின் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.


பூமி மாதாவிற்கு குழந்தையிடம் மட்டுமே கருணையுண்டு போல


இறைவன் ஒவ்வொரு செயலுக்கும் இரண்டு மாயையை ஏற்படுத்தி தருகிறார்.


ஏதோ ஒரு ரகசியம் இரண்டு பெரிய மாயத் திரையினால் மறைக்கப்பட்டுள்ளது.


ஆனால் மேலே இருக்கும் முதல் திரை மட்டுமே நம் கண்களுக்கு நன்றாகப் புலப்படுகிறது.


அதன் பெயரே அறிவியல்.


உள்ளிருக்கும் அந்த ரகசியத்தை இன்னொரு ரகஸ்யம் மறைக்கிறதல்லவா 


அது என்ன?


சில கேள்விக்கு அந்த கேள்வியே விடையாகிறது.


அது ஒரு ரகஸ்யம். ( தொடரும் )



- தீசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு